மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில், இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், மீனவர்கள் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கடிதம் எழுதினார்.
இதற்கிடையே, மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கை தூதரிடம் இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது இந்திய அரசு. மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே மீனவர்கள் விவகாரத்தை கையாள வேண்டும் என இலங்கை தூதரிடம் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் விவகாரத்தில் இருநாடுகள் இடையேயான ஒப்பந்தங்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டிl படுகாயமடைந்த 2 மீனவர்களும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 மீனவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
மீனவர்கள் விவகாரத்தில் இந்திய அரசு கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள இலங்கை அரசு, விபத்தாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாகவும், இதில் காயமடைந்த மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினரே முதலுதவி செய்து யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறியுள்ளது.