Shubman Gill: சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சுப்மான் கில், ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் எட்டு சதங்களை அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 49.4 ஓவர்களில் 228 ரன்கள் சேர்த்தது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ரோஹித் 36 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்து அவர் சாதனை படைத்தார். 261 இன்னிங்ஸ் ஆடி இந்த ரன்களை அவர் எடுத்துள்ளார்.
தொடர்ந்து வந்த கோலி 22 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன்கள், அக்சர் படேல் 8 ரன்கள் எடுத்து வெளியேறினர். மிடில் ஓவர்களில் இந்தியா விக்கெட்டை இழந்து தடுமாறிய சூழலில் கே.எல்.ராகுல் பேட் செய்ய வந்தார். ஆட்டத்தின் சூழலை அறிந்த அவர், கில் உடன் சேர்ந்து கூட்டணி அமைத்து இன்னிங்ஸை நிதானமாக அணுகினார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒருநாள் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் தனது 8-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 129 பந்துகளில் 101 ரன் எடுத்திருந்தார். ராகுல், 47 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இருவரும் இறுதிவரை தங்களது விக்கெட்டை இழக்கவில்லை. இறுதியாக இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தனது அபார சதத்திற்காக கில் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக, 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியர் ஒருவர் அடித்த மூன்றாவது மெதுவான சதமாகும். 2012 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் தனது சதத்தை முடிக்க 128 பந்துகளை எடுத்தார், இது 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக மெதுவான சதமாகும். 2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித்தின் சதம் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக மனோஜ் திவாரி மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக கில் அடித்த சதம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த 51 இன்னிங்ஸ்களில் எட்டு சதங்களை அடித்த வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார். அதே நேரத்தில் ஷிகர் தவான் 57 இன்னிங்ஸ்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.