2017-18 ஆம் ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தாமல் வருமானவரிப் படிவத்தை தாக்கல் செய்த கட்டுமான வணிக நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்திற்கும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்தாமல், வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்ததற்காக வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு, 276சி(2) மற்றும் 278பி ஆகியவற்றின் கீழ் இந்த நிறுவனம் மற்றும் அதன் இரண்டு இயக்குநர்களுக்கு எதிராக சென்னைப் பெருநகரக் கூடுதல் நீதிபதி (பொருளாதார குற்றங்கள் – 1), முன் வருமானவரித்துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி இந்த நிறுவனம் மற்றும் இயக்குநர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.