உத்தரகாண்டில் ஆதி கைலாஷ் சிகரத்தின் தரிசனத்துடன், பார்வதி குளத்தில் உள்ள சிவன் பார்வதி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் உள்ள கைலாஷ் வியூ பாயிண்டில் இருந்து இன்று காலை ஆதி கைலாசத்தை பார்வையிட்டார். பின்னர், பார்வதி கோவிலில் வழிபாடு செய்தார். இங்கிருந்து 20 கிமீ தொலைவில் சீனாவின் எல்லை தொடங்குகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-சீனா எல்லையில் உள்ள ஆதி கைலாஷ் மலைக்கு சென்ற நாட்டின் முதல் பிரதமர், நரேந்திர மோடி ஆவார். தரிசனத்திற்குப் பிறகு உத்தரகாண்ட் மாநிலம் தார்ச்சுலாவில் இருந்து 70 கிமீ தொலைவில் 14,000 அடி உயரத்தில் உள்ள கஞ்சி கிராமத்தை அடைந்தார். அங்கு உள்ளூர் மக்களை சந்தித்தார். பின்னர், அல்மோராவில் உள்ள ஜாகேஷ்வர் தாமுக்கு மதியம் 1 மணியளவில் பிரதமர் சென்றடைந்தார். இங்குள்ள சிவலிங்கத்திற்கு பூக்களும், நீரையும் சமர்ப்பித்து இறைவனுக்கு ஆரத்தி செய்தார்.
தொடர்ந்து, பித்தோராகரில் கிராமப்புற மேம்பாடு, சாலைகள், மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர், தோட்டக்கலை, கல்வி, சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகள் தொடர்பாக சுமார் ரூ.4,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.