குரங்கம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
குரங்கம்மை (Mpox) என்பது ஒரு வைரஸ் சோனோடிக் நோயாகும். தென்னாப்பிரிக்கா, கென்யா, உகாண்டா, காங்கோ, ருவாண்டா, ஜனநாயக குடியரசு, கேமரூன், நைஜீரியா, ஐவரி கோஸ்ட் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளில் குரங்கம்மை நோய் பதிவாகியுள்ளது. இதுவரை 120 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு பரிசோதனை நிலையத்தில் குரங்கம்மை கண்டறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு தனிமைப்படுத்துதல் வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
குரங்கம்மை நோய்… தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!
* குரங்கம்மை பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி இருந்தால், 104 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ள வேண்டும்.
* பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.
* பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
* மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்ற வேண்டும்.
* அறிகுறியுடன் வரக்கூடியவர்களை தனியார் மருத்துவமனைகளும் கண்காணித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.