ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படம் வெளியான பின்பு நீலகிரியை சேர்ந்த பொம்மனும் அவரது மனைவி பெள்ளியும் அனைவராலும் கொண்டாடப்பட்டனர். இதை தொடர்ந்து இருவரும் சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு குடியரசு தலைவரும், பிரதமரும் இருவரையும் பாராட்டினர். இந்நிலையில் தமிழக வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றி வந்த பெள்ளிக்கு, முதல் யானை பராமரிப்பாளராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. பெள்ளியே யானை பராமரிப்பாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் இந்த பணி நியமன ஆணையை வழங்கினார். எந்த யானை குட்டி வந்தாலும் அதையும் சிறப்பாக பராமரிப்போம். எத்தனை யானை குட்டிகள் வந்தாலும் அவற்றையும் பராமரிக்க தயாராக இருக்கிறோம் என்று சொன்ன தம்பதிக்கு கிடைத்த அங்கீகாரமே இந்த பணி நியமனம் என்றாலும் மறுப்பதற்கில்லை.