தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிமீ வேகத்தில் நகர்ந்து திருகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 380 கி.மீ மற்றும் காரைக்காலில் இருந்து 610 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது இன்று மாலை வரை மேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. அது படிப்படியாக மேற்கு-தென்மேற்கு திசையில் திரும்பி நாளை இலங்கைக் கடற்கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வங்கக் கடல் பகுதியில் சூறைகாற்றானது மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளதால், கடலூர் அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தென் தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா, குமரி கடற்கரை, தென்மேற்கு வங்காள விரிகுடா, மற்றும் ஸ்ரீலங்கா கடற்கரை பகுதியில் இன்று காற்றின் வேகம் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ வரையில் இருந்து அதிகரித்து 65 கிமீ வரையிலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்கப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் பெரும்பாலான விசை படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.