Fishermen strike: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால், ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பாதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை காலை மீன்பிடிக்க சென்று, நேற்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஐந்து விசைப்படகளுடன் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்து, நேற்று முன் தினம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை தொடங்கினர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினசரி ரூ.1 கோடி மதிப்புள்ள வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 10,000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களின் நல்வாழ்வு பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், முதலமைச்சர் ஸ்டாலின், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு, இரு நாடுகளின் கூட்டுப் பணிக்குழுவைக் கூட்டி நிரந்தரத் தீர்வைக் காணவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதை உறுதி செய்யவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த ஆண்டு ஜனவரி முதல், எட்டு தனித்தனி சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சருடனான தனது உரையாடலில் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.