தமிழகத்தில் இரண்டு மாத கால மீன்பிடித் தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000-த்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், 2025-ம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையிலான இரண்டு மாத காலங்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை உபயோகப்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதன்படி விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மேற்கூறிய காலகட்டங்களில் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக் கூடாது.
இந்த தடைக்காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் , தொண்டி, எஸ்.பி. பட்டிணம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 2 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மேலும் தடைக்கால நிவாரணத் தொகையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 33 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ 8,000 தடைக்கால நிவாரணமாக வழங்கப்பட உள்ளது.