வாலாஜாபேட்டை அருகே காட்டுப்பகுதியில் 5 மாத குழந்தையின் தாய் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலன் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளான்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரின் 3-வது மகள் ரேஷ்மாலதா (21). இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தலைப்பிரசவத்துக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு வந்தார் ரேஷ்மலதா. குழந்தை பிறந்த நிலையில், கணவர் வீட்டுக்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியே செல்வதாக கூறிய ரேஷ்மாலதா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, ரேஷ்மலதாவை போலீசார் தேடி வந்த நிலையில், கால்வாயில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த குமரன் (28) என்பவர், கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமரனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மாலதா குமரன் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவரது காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷ்மாலதாவுக்கு, அவரது பெற்றோர் கோபிநாத்தை திருமணம் செய்து வைத்தனர். குமரன் சென்னை வடபழனியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். குமரனின் மனைவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். திருமணம் ஆன பிறகும் ரேஷ்மாலதாவுக்கும், குமரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே ரேஷ்மாலதா பிரசவத்திற்காக தாய்வீட்டிற்கு வந்திருந்தார். குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆன பிறகும் ரேஷ்மாலதா, அவரது கணவர் வீட்டிற்கு செல்லாமல் இங்கேயே இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி ரேஷ்மாலதா தனது குழந்தையை வீட்டில் விட்டுட்டு கள்ளக்காதலன் குமரனை சந்தித்து திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த குமரன் ரேஷ்மாலதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சடலத்தை கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.