வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது மருத்துவமனைகளின் சிகிச்சை உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால், வெள்ளம் சூழ தொடங்கிய உடனே மருத்துவமனைகளில் முன்னெடுத்த துரித நடவடிக்கை காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன” என்றார்.
இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி பேசுகையில், “வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரத்துறை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் பொதுமக்களும் விழிப்போடு இருக்க வேண்டும். அனைத்து மக்களும் நடமாடும் மருத்துவ குழுவிடம் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.