சென்னை மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் துரிதகதியில் செய்யப்பட்டு வருவதாக, பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மேயர் பிரியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல விஷால் பேசியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்..! 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகும் ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அதிமுக அரசுதான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 10 ஆண்டுகளாக அதிமுகதான் ஆட்சியில் இருந்தது.
மழைநீர் வடிகால் திட்டத்தை முதன்மையான திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது சென்னை மாநகராட்சி. திமுக பொறுப்புக்கு வந்த 2021இல் இருந்து மழைநீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தது. இதனால் தான் சென்னை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த மழைநீர் கால்வாய்கள் மூலம்தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழைநீர் எல்லாம் வெளியேறியது. அதனை எல்லாம் பலர் பாராட்டி எழுதியது உங்களுக்கு தெரியுமா?
இப்போது பெய்துள்ள பெருமழை 2015-ஐ விட அதிகம். பல ஆண்டுகளில் வரலாறு காணாத மழை. புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருப்பதால் மழைநீர் கால்வாய் மூலம் கடலில் கலக்க முடியாத சூழலில் மழைநீர் தேங்கியது. 2015இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் உயிரிழந்தனர். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது?
2015இல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டனர். இன்று முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம்.
வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகின்றனர். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!” என்று நடிகர் விஷாலுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.