திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், கிட்டதட்ட 31ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று ஒரு வெள்ளத்தால் இந்த மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் இருந்த நெல்லையா இது? என அச்சப்படும் அளவிற்கு தற்போது பெய்து வரும் கனமழையால் தத்தளிக்கிறது நெல்லை மாவட்டம். நேற்று இரவு முதல் நிற்காமல் பெய்து வரும் கனமழையால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்து முக்கிய பெரிய அணைகளும் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1992ல் என்ன ஆனது? தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் இந்த கனமழை கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன் நடந்த துயர வரலாற்றை 2024ல் மீண்டும் கண்முன் நிறுத்துமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட புயலால் தென் மாவட்டங்களில் இதே போன்று வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. குறிப்பாக நெல்லை பாபநாசத்தில் தூக்கத்திலேயே 17 பேர் பரிதாபமாக வெள்ளத்திற்கு பலியான துயர சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு காரணம் அணைகள் உடையும் அபாயத்தை தவிர்ப்பதற்காக நள்ளிரவில் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர்.
1992 ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி பெய்த வரலாறு காணாத மழையால் மணிமுத்தாறு பாபநாசம் சேர்வலாறு அணைகளுக்கு வந்த வெள்ள நீர் மற்றும் மழைநீர் என அனைத்தும் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் பாபநாசம் திருவள்ளுவர் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் 17 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கோர சம்பவம் நிகழ்ந்தது. மேலும் சுதாரித்து மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்த பொதுமக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். 31 ஆண்டுகளுக்கு முன் நடந்த துயர சம்பவங்களை, தற்போது நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மீண்டும் நினைவுபடுத்துகிறது.
Read more ; எவ்வளவு வயசானாலும் இளமையாவே இருக்கணுமா..? அப்ப இந்த 5 உணவுகளை கண்டிப்பா சாப்பிடாதீங்க…