அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிப்பதற்கான இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இணையதளத்தை நகர ஊரமைப்பு இயக்ககம் வெளியிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் நேற்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, சென்னையை சேர்ந்த அருண் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வரன்முறை செய்யாத அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில் அடிப்படை வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும், வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளில் அரசின் செலவில் சாலைகள் மற்றும் மேம்பாட்டு வசதிகளை செய்யக் கூடாது என்று ஏற்கனவே அரசாணை பிறப்பித்திருந்தும் கூட, இந்த உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாக மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, ”அரசு ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அதற்கான வழிமுறைகளையும் வகுக்கிறது. அதைமீறி சில அதிகாரிகள் தவறாகச் செயல்படுகிறார்கள். இதை ஏற்க முடியாது. அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. வரன்முறை செய்யாத மனைகள் எந்த அடிப்படை வசதிகளையும் இனி பெற முடியாது. அதேசமயம், அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வாங்கும்போது, பொதுமக்கள் கவனமாகவும் இருக்க வேண்டும்” என தெரிவித்தது.
இந்நிலையில், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இணையதளத்தை நகர ஊரமைப்பு இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில், “அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், 2016, அக்டோபர் 20 அல்லது அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் அடுத்தாண்டு பிப்.29ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in
என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.