நாட்டின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை மட்டுமல்லாமல் தினசரி பயன்பாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு தொடக்கம் முதலே பருப்பின் விலை 10% உயர்த்தப்பட்ட நிலையில், தற்பொழுது மீண்டும் 10% வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் சாமானிய மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, உணவு பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு பல முயற்சிகள் எடுத்தாலும் அதிகப்படியாக மழை காரணமாக விவசாய உற்பத்தி பெரிய அளவில் பாதித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெங்காயம், தக்காளி, வெள்ளை பூண்டு, இஞ்சி, பீன்ஸ் போன்றவற்றின் விலை இதுவரை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருவதை தொடர்ந்து தற்பொழுது பருப்பின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.