கர்நாடக மாநிலத்தில் பாஜக இளைஞரணி தலைவர் பிரவீன் நெட்டார் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, தக்ஷின் கன்னடா மாவட்டத்தின் சூரத்கல்லில் ஒரு முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பா.ஜ.க இளைஞரணி தலைவருக்கு அஞ்சலி செலுத்த, முதல்வர் பசவராஜ் பொம்மை மாவட்டம் வந்திருந்த போது, இச்சம்பவம் நடந்தது.
மங்களூருவின் புறநகர் பகுதியில் உள்ள சூரத்கல் என்ற இடத்தில் ஃபாசில் என்ற இளைஞர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.. பயங்கர ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.. சூரத்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சூரத்கல், முல்கி, பாஜ்பே, பனம்பூர் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது..
இறந்தவர் 23 வயதான ஃபாசில் மங்கல்பேட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். புகாரின்படி, மங்களூரு நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள சூரத்கல்லில் உள்ள மொபைல் கடைக்கு அருகில் உள்ள சாலையின் நடுவில் 3 பேர் கொண்ட கும்பல் ஃபாசிலை அடித்து, ஆயுதங்களால் வெட்டிக் கொன்றது. மங்களூரு: சூரத்கல், முல்கி, பாஜ்பே, பனம்பூர் ஆகிய 4 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சூரத்கல் பகுதி காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
ஃபாசில் கொலைக்கும் பாஜக இளைஞரணித் தலைவரின் மரணத்துக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மொகிதீன் பாவா குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே கொலைக்கான சரியான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என மாநகர காவல் ஆணையர் என்.சசிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைதியை சீர்குலைக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.