இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால், வழக்கத்தை விட ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், ரயில்களில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தற்போது பயணிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது, ரூ.100 மேல் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே அதிக விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க ஐஆர்சிடிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளதோடு, விரிவான அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் 10 வழித்தடங்களில் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் தெரிந்து விடும். மேலும், இனிவரும் நாட்களில் இன்னும் சில முக்கிய ரயில்களிலும் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.