உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றதை அடுத்து அந்த அணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்திய இளைஞர்கள் மீதும் தனக்கு நம்பிக்கை உள்ளது -பிரதமர்
மேகாலயா : மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நேற்று ரூ.2,450 கோடியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக ஷில்லாங்கில் உள்ள மாநில மாநாட்டு மைதானத்தில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கத்தார் உலகக்கோப்பையில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களின் திறனை இந்தியர்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம் ஆனால், இந்திய இளைஞர்கள் மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். கத்தார் உலகக்கோப்பையை போன்று, இந்தியாவிலும் சர்வதேச போட்டிகளை நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ரசிகர்கள் மட்டும் தானா?
கத்தார் உலகக்கோப்பையை வெல்ல 32 அணிகள் களத்தில் போட்டியிட்டன. ஆனால், 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இதுவரை போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இருந்தும், இந்தியா முழுவதும் கால்பந்து ரசித்து விளையாடப்படுகிறது. ஆனால், அதை சர்வதேச அளவில் விளையாடுவதற்கு கொஞ்சம் ஊக்கமும், உயர்த்தி விடுவதற்கு அரசும் முன்வந்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான கால்பந்து வீரர்கள் இந்தியாவிற்கு கிடைப்பார்கள். பிரதமரின் கத்தார் உலகக்கோப்பை குறித்தான நேற்றைய உரை இந்திய கால்பந்து வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஊக்கத்தை அளிப்பதாக இருந்தாலும், அதற்கான முழுமுயற்சிகளை மேற்கொண்டால் பிரதமர் கூறியதுபோல் இந்தியாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்துவது மட்டும் அல்லாமல் வரும் காலங்களில் உலகக்கோப்பை கால்பந்தில் இந்தியாவும் தனது சாதனையை தடம் பதிக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.