முழு அடைப்பிற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருவனந்தபுரம், கேரளா உட்பட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய மத அமைப்பு தொடர்புடைய 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக, கேரளாவில் அதிகபட்சமாக 22 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இன்று கேரளாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என பிஎப்ஐ அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. முழு அடைப்பு அழைப்பை தொடர்ந்து அந்த மாநிலத்தின் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் பிஎப்ஐ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பங்கள் நடந்து வருகிறது. பேருந்துகள், கார்கள், ஆட்டோகள் என பல வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கன்னூர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், பிஎப்ஐ அமைப்பு சார்பில் கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
அப்போது, முழு அடைப்பிற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உரிய அனுமதியின்றி யாரும் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என தெரிவித்த நீதிமன்றம் அனைத்து வகையான வன்முறைகளையும் தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டது.
பிஎப்ஐ போராட்டத்திற்கு பின் கைது நடவடிக்கை என்பது சரியல்ல என கூறிய நீதிமன்றம் முழு அடைப்புக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.