புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டுமென கூறுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு ஒரு நாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை அல்லது நாளை மறுநாள் இது நடந்தே தீரும் என தெரிவித்தார்.
மேலும், அரசின் திட்டங்கள் பற்றி முழுமையாக அறியாமல் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிடுகிறது. கோட்டைகளில் இருந்து பிறப்பிக்கப்படும் திட்டங்கள் களத்தில் வெற்றி பெறுகிறதா..? என ஆய்வு செய்வதால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பெய்த தொடர் மழையிலும் கூட தண்ணீர் தேங்காமல் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டுமென கூறுகிறார்கள். திமுக ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகளை அவர்கள் ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். தேவையின்றி, எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது தேவையும் இல்லை. எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை என கூறினார். முதல்வர் முக.ஸ்டாலினின் இந்த பேச்சு தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கும் வகையில் அமைந்துள்ளது.
Read More : திடீரென பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து..!! விபத்தில் சிக்கி 23 பேர் மரணம்..!! மீட்புப் பணி தீவிரம்..!!