தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்லூரி வாரியாக தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் இன்று கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ், ஆங்கில மொழி பட்டப்படிப்புகள் மற்றும் பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் தனித்தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் பலரும் அடுத்து என்ன செய்யலாம், எந்த கல்லூரியில் சேரலாம் என்று ஆலோசனை செய்ய தொடங்கிவிட்டனர். பலருக்கும்.. முக்கியமாக கிராமப்புற மாணவர்களுக்கு எங்கே படிப்பது, எந்த கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுப்பது என்பது போன்ற தெளிவான திட்டமிடல் இல்லை. இந்நிலையில்தான் இவர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எங்கே சேர வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைகள் என அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த எண்ணுக்கு அழைத்து ஆலோசனைகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.