காஷ்மீர் தாக்குதல் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கை சர்ச்சையில் சிக்கியதை அடுத்து இன்று (ஏப்ரல் 28) விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தளமான பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் இந்திய திரைத்துறை பிரபலங்கள் வரை என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, காஷ்மீர் தாக்குதல் குறித்து நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதைக்கண்ட பலரும், விஜய் ஆண்டனி பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என அவரைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு, காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Read more: 1000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்…! இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!