ஆஸ்திரேலியாவில், மன நோயாளிகளின் நலனுக்காக தொண்டு நிறுவனத்திற்கு வழங்க இளைஞர் ஒருவர் 24 மணி நேரத்தில் 8,008 புல்அப்ஸ்களை எடுத்து உலக சாதனை படைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் ஜாக்சன் இட்டாலியானோ. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மன நோயாளிகளின் நலனுக்காக தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்காக அதிக எண்ணிக்கையிலான புல்அப்ஸ்களை எடுக்கத் திட்டமிட்டார்.அதன்படி, 24 மணி நேரத்தில் திட்டமிட்டபடி 8,008 புல்-அப்ஸ்கள் எடுத்து முடித்தார். இதன் மூலம் டாலர் மதிப்பில் 6 ஆயிரம் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 4,80,000 நிதி திரட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஜாக்சன் இட்டாலியானோ தனது நிதி திரட்டல் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நான் செய்யும் ஒவ்வொரு புல்அப்ஸ்க்கும் 1 டாலர் திரட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளேன். அனைவரது உதவியும் தேவை. என்னுடைய இந்த முயற்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் திரட்டப்படும் அனைத்து நிதியும் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், முன்னதாக 24 மணி நேரத்தில் 7,715 புல்-அப்ஸ் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது