ஆரோக்கியத்தை மேம்படுத்த அனைத்து பெண்களும் தினசரி உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வளர்ச்சிக்கும், உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும், சில ஹார்மோன்களை உருவாக்குவதற்கும் இரும்புச்சத்து மிகவும் அவசியம். இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்தும். குறிப்பாக அதிக மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி காரணமாக, பெண்கள் தங்கள் உடலில் இருந்து இரும்புச்சத்தை அதிக அளவில் இழக்கின்றனர். இது பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அந்தவகையில் நட்ஸ், கடல் உணவுகள், பீன்ஸ், காய்கறிகள் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமுள்ளது.
உடலில் புதிய செல்களை உருவாக்க வைட்டமின் பி அவசியம், அதே நேரத்தில் ஃபோலிக் அமிலம் கர்ப்ப காலத்தில் நரம்புக் குழாயை உருவாக்க உதவுகிறது, இது குழந்தையின் மூளை மற்றும் முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. நட்ஸ், பீன்ஸ், கீரை, ஆரஞ்சு சாறு போன்றவற்றிலும் வைட்டமின் பி சத்து அதிகமுள்ளது. மாறிவரும் வாழ்க்கை மற்றும் உணவு முறைகளால், பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குச் சிறந்த இயற்கை ஆதாரம் சூரியன்தான். ஆனால் தட்பவெப்ப நிலையைக் கருத்தில் கொண்டு அதன் எப்போதும் சூரிய ஒளியில் இருப்பது சாத்தியமில்லை. வைட்டமின் டி எலும்புகள், நோய் எதிர்ப்பு சக்தி, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் உயிரணு வளர்ச்சிக்கும் முக்கியமானது. முட்டையின் மஞ்சள் கரு, சீஸ், வலுவூட்டப்பட்ட பால் இது அதிகமுள்ளது.
அனைவருக்குமே எலும்பு ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது, எனவே, போதுமான அளவு கால்சியம் எடுத்துக்கொள்வது அவசியமாக உள்ளது. பொதுவாக ஆண் பெண் என 40 வயதைக் கடந்தவுடன் கால்சியம் உட்கொள்வது மிகவும் அவசியம், ஏனெனில் இந்த நேரத்தில் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சும் திறனை இழக்கத் தொடங்கும். பால், சீஸ், தயிர் போன்றவற்றில் இது நிறைந்துள்ளது. மக்னீசியம் தசைகள் மற்றும் நரம்புகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவையும் கட்டுப்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இதனை போதுமான அளவில் பெற வேண்டியது மிகவும் அவசியமானது. நட்ஸ், கீரை, ஓட்ஸ், பால் பொருட்கள், பூசணி விதைகள், அவோகேடா போன்றவற்றில் இது நிறைந்துள்ளது.