தமிழ்நாட்டில் அடுத்த 20 நாட்களுக்குள் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள் தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகையின் சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், சட்டப்பேரவையில் ஒரு முக்கிய அறிவிப்பை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் அடுத்த 20 நாட்களுக்குள் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். தற்போது 490ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700ஆக உயர்த்தப்படும் என்றும் 21 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நகராட்சிகளின் எண்ணிக்கையும் 139இல் இருந்து 159ஆக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.