அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் 16 இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில ஒரு இடத்திலும், கோவை மாவட்டத்தில ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை தி.நகர் தொகுதியில் 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யா அதிமுகவை சேர்ந்தவர். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அதிமுக வேட்பாளராக சத்யா போட்டியிட்டபோது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து மதிப்பு ரூ2.78 கோடி என தெரிவித்திருந்தார். அவர் சொத்துகளை மறைத்து மனுதாக்கல் செய்துள்ளதாக, பத்திரிகையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இப்புகாரில்விசாரணை நடத்த முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளலாம் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து விசாரணை நடத்திய தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சத்யா, 16.33 % சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி உள்ளிட்ட வர்களை சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.