தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக 1998 முதல் 2000 வரையிலும், 2005 முதல் 2010 வரையிலும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் நரேஷ் குப்தா (73). உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1973ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். தேர்தல் அதிகாரி பணி ஓய்வுக்கு பிறகு மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தபோது, தமிழகத்தில் 2006 சட்டசபை தேர்தல் மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. மேலும், தமிழகத்தில் 12 இடைத்தேர்தல்களையும் மிக திறமையாக நடத்திக்காட்டினார்.
அரசுப் பணி ஓய்வுக்கு பிறகு நரேஷ் குப்தா தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்கு செல்லாமல் சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ பர்ஸ்ட் மேட் மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நரேஷ் குப்தாவின் உடல் நாளை (புதன்கிழமை) அடக்கம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நரேஷ் குப்தா மறைவுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘முன்னாள் தலைமை தேர்தல் அலுவலரும், காந்திய பற்றாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான நரேஷ் குப்தா மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். உள்துறை செயலாளர், மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்-செயலாளர் என பல உயர் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விளங்கியவர் நரேஷ் குப்தா. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.