தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்’, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், இரண்டு வாக்குறுதிகள் திமுகவின் தேர்தல் என் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திமுகவின் கணக்குப்படி பார்த்தால், 2021-ம் ஆண்டே அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் பணியிடங்கள் காலி. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரித்து இருக்கும்.

கொரோனா பாதிப்பு காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பினை உயர்த்தியது. ஆனாலும், பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் மெத்தனப் போக்கையை தொடர்ந்து திமுக அரசு கடைபிடித்து வருகிறது. காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் வயது வரம்பை உயர்த்துவது என்பது சிகிச்சையே அளிக்காமல் நோயாளியை மருத்துவமனையில் வைத்திருப்பதற்கு சமம்.
ஓராண்டிற்கு 70,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆனால் 10,000 காலிப் பணியிடங்களைக் கூட நிரப்பியதாகத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான புதிய தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில், வெறும் 1,754 பணியிடங்களுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த குரூப் – 4 பதவிகளுக்கான தேர்வின் அறிவிக்கை நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில், அதனை உடனுக்குடன் நிரப்புவதில் தாமதம் ஏன் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

குரூப் – 4 தேர்வு எழுதி கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகியும் அதற்கான முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் அடுத்தத் தேர்வு 2024 ஆம் ஆண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்துவதில் தான் தாமதம் என்றால், முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் என்ற நிலை நிலவுகிறது. மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வு வாரியம், வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் தேர்வு வாரியம் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் பட்டதாரி நிலை, மேல்நிலைப் பள்ளி நிலை ஆகியவற்றிற்கான தேர்வுகளை உடனுக்குடன் நடத்தி அதன் முடிவுகளை வெளியிடுகின்றன.
ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்துவதில் காலந்தாழ்த்துவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. மாறாக ஏமாற்றம் அளிக்கும் செயல். இந்த நிலை நீடித்தால் ஐந்தாண்டுகளில் மூன்றரை லட்சம் அல்ல, முப்பத்தைந்தாயிரம் பணியிடங்களைக் கூட திமுக அரசால் நிரப்ப முடியாது. இதிலிருந்தே திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. இது ‘திராவிட மாடல்’ அரசு அல்ல, ‘திராபை மாடல்’ அரசு, அதாவது எதற்கும் உபயோகமில்லாத பயனற்ற அரசு. தமிழ்நாடு அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற சூழ்நிலையில், இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த குரூப் – 4, குரூப் – 2, 2A ஆகியவற்றிற்கான தேர்வுகளை 2023 ஆம் ஆண்டு நடத்தாமல் காலந்தாழ்த்துவது இந்த அரசு ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.