முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு மலையில் இருந்து கீழே இறங்கும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக அவரது மகன் தகவல் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்த போது எம்எல்ஏவாக இருந்த கோவை செல்வராஜ் பின்னர் திமுகவில் இணைந்தார்.
ஆரம்பகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் கோவை செல்வராஜ். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலக்கட்டமான 1991 – 96ல் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆதரவாளராக மாறி, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏவாக சட்டமன்றத்தில் செயல்பட்டார். 2015 ஆம் ஆண்டு திமுகவில் காங்கிரஸ் இருந்தபோது, திமுகவை விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் கோவை செல்வராஜ்.
காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அதிமுகவுக்கு சென்ற கோவை செல்வராஜ் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தார். பின்னர் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாவட்ட செயலாளராக இருந்த அவர், அந்த அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். சமீபத்தில் கோவை செல்வராஜூக்கு திமுக செய்தித் தொடர்புத் துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் திருப்பதியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த கோவை செல்வராஜின் உடல் நாளை காலை அவரது சொந்த ஊரான கோவைக்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.