முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு மகாராஷ்டிர மாநிலம் புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
89 வயதான பிரதீபா பாட்டீல், 2007 முதல் 2012 வரை இந்தியாவின் மதிப்பிற்குரிய ஜனாதிபதி பதவியை வகித்த முதல் பெண் என்ற வரலாறு படைத்தவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலையில் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இதனையடுத்து நேற்று புனேவில் உள்ள பாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது கணவர் தேவிசிங் ஷெகாவத், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 89வது வயதில் மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
1962 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தின் ஜல்கான் நகரத் தொகுதியிலிருந்து பிரதீபா பாட்டீல் முதல் முறையாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரானார் (MLA).அதன்பிறகு, 1985 வரை எட்லாபாத் (முக்தாய் நகர்) தொகுதியில் இருந்து தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, 1985 முதல் 1990 வரை ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) பணியாற்றினார், பின்னர் 1991ல் அமராவதி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினரானராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2007 முதல் 2012 வரை இந்தியாவின் மதிப்பிற்குரிய ஜனாதிபதி பதவியை வகித்த முதல் பெண் என்ற வரலாறும் படைத்தார். இதுவரை போட்டியிட்ட ஒரு தேர்தலில் கூட தோல்வி அடையாத தனிச்சிறப்பும் அவருக்கு உண்டு.