திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபரும், முதல்வருமான முனைவர் ஜான் பிரிட்டோ (வயது 78) மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி புனித சென் ஜோசப் கல்லூரிக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அருட் சகோதரர்களுக்கும் கல்லூரியின் பேராசிரியர் மாணவர்கள் ஆகியோருக்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொண்டார். உடன் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் மோகன் ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”செயிண்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் அதிபரும், செயலருமான ஜான் பிரிட்டோ மறைவு செய்தி அறிந்து மனம் வருந்தினேன். தாவரவியல் வல்லுநர் ஜான் பிரிட்டோ ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற உதவி, வேலைவாய்ப்பு பெற உறுதுணையாக இருந்தவர். ஜான் பிரிட்டோ மறைவால் வாடும் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”.