பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ரோகித் குமார் என்ற இளைஞர் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும், கட்டெறும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய் மணிவேல், நாகை 360 ஆகிய 5 யூடியூப் சேனல்கள் மீது மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜரான பிராங்க் சேனல் யூடியூபர்களிடம் விசாரணை நடத்தி, பல்வேறு அறிவுரைகள் வழங்கி எச்சரித்து அனுப்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை பாதிக்கும் வகையில் பிராங்க் வீடியோக்கள் வெளியிட மாட்டோம் என போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக அவர்கள் உறுதிமொழியும் கொடுத்துள்ளனர்.
யூடியூப் சேனல்கள், பொதுமக்கள் பாதிக்காத வகையில் தங்களுக்குத் தெரிந்த நபர்கள் மூலம் விதிகளை மீறாமல் வீடியோ எடுத்து வெளியிடலாம் என போலீசார் அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பிராங்க் வீடியோ எடுக்கப்படும் பொதுமக்களிடமும் உரிய விளக்கத்தை கொடுத்து வீடியோ எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற யூடியூப் சேனல்களையும் இதேபோன்று விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களில் பிராங்க் வீடியோவால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது வீடியோவின் தன்மைக்கு ஏற்ப கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிற சிறப்பு சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபாசமாகவும் பகைமையை வளர்க்கும் வகையிலும் இரண்டு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் ஜாதி மற்றும் மத, இனரீதியாகவும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தியும் பிறப்பு, மொழி உள்ளிட்ட விவாகரங்களை வெளிப்படுத்தும் வகையிலும் பிராங்க் வீடியோ வெளியிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என யூடியூப் சேனல்களுக்கு காவல்துறை எச்சரித்துள்ளது.