fbpx

உஷார்..! டேட்டிங் தொடர்பான செயலி மூலம் பணம் திருடும் மோசடி கும்பல்…! சைபர் காவல்துறை எச்சரிக்கை…!

இந்த ஆண்டில் இதுவரை ரூ.2,160 கோடி அளவுக்கு இணையவழி மோசடிகள் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் இது போன்ற குற்றங்களில் சிக்கி பொருள் இழப்புகளைச் சந்திக்காமல் இருக்க விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர மாநில காவல்துறையின் இணையவழிக் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரி விரிஜேஷ் கூறியுள்ளார்.

இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது குறித்த காணொலிக் கருத்தரங்கம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சார்பில் நேற்று நடைபெற்றது. இந்த மோசடிகள் தொடர்பாக 9,20,000 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இவற்றில் 70 சதவீத மோசடிகள் முதலீடு மற்றும் கேஒய்சி (KYC) தொடர்பானவை என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 5 மாதங்களில் டிஜிட்டல் கைது தொடர்பாக 120 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏபிகே (APK) ஃபைல்கள் என்று நமது கைபேசிகளில் இணைப்பு வந்தால் அவற்றை திறக்கக் கூடாது என்று எச்சரித்த அவர், அவற்றைத் திறக்கும் போது மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது. போலியான திருமண தகவல் தொடர்பு இணையதளங்களில் பரிசுத் தொகை வழங்குவதாக மோசடிகள் நடைபெறுவதாகவும் அவர் கூறினார். டேட்டிங் தொடர்பான செயலிகளின் மூலம் மோசடியாகப் பணத்தைப் பறிக்கும் செயல்களும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

ஓடிபி மோசடிகள், க்யூஆர் குறியீட்டு மோசடிகள், வாட்ஸ் அப், டெலிகிராம் போன்றவற்றின் மூலமான மோசடிகள், இணையதள வேலைவாய்ப்புத் தொடர்பான மோசடிகள் போன்றவையும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். 120-க்கும் மேற்பட்ட இணையதள மோசடிகளுக்கு வாய்ப்பிருப்பதாகவும் இவற்றில் சுமார் 20 வகையான மோசடிகள் அதிகம் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

இணையதள மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ள தனிப்பட்ட பயன்பாட்டுக்கு ஒரு கைபேசி எண்ணையும், அலுவலகப் பயன்பாட்டுக்கு ஒரு கைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார். தனிப்பட்ட பயன்பாட்டு எண்ணில் நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார். கைபேசிகள் காணாமல் போனால் www.ceir.gov.in என்ற இணையதளத்தில் புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும் அவர் எடுத்துரைத்தார். இணையதள மோசடிகள் தொடர்பாக 1 9 3 0 என்ற எண்ணிலோ அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார்களை பதிவு செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார். இணையதள மோசடிகள் மீது நடவடிக்கை எடுக்க நேரடியான சட்டப்பிரிவுகள் இல்லை எனவும், பிஎன்எஸ் 420, 318 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English Summary

Fraud gang stealing money through dating app

Vignesh

Next Post

குட்நியூஸ்!. அல்சைமர் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு!. இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்!

Tue Oct 29 , 2024
Alzheimer Breakthrough: Major Discovery by Indian Scientists

You May Like