பாஜக பிரமுகர் லோன் ஆப்பில் பெற்ற ரூ.5,000 கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் அவரது செல்போனில் இருந்த தமிழிசை சௌந்தரராஜனின் படத்தை ஆபாசமாக சித்தரித்து கடன் செயலி மோசடி கும்பல் வெளியிட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த டெல்லி கோபி என்ற பாஜக நிர்வாகி ’ராயல் கேஷ் ஆப்’ என்ற செயலி மூலமாக ரூ.5,000 கடன் பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கான தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கோபி பணத்தை திருப்பி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவரது செல்போனை ஹேக் செய்து அதில் இருக்கும் கோபி மற்றும் வேறு சிலரின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அவரது நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்துள்ளனர். குறிப்பாக, கோபியின் செல்போனில் இருந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் படத்தையும் ஆபாசமாக சித்தரித்து அந்த கும்பல் பகிர்ந்துள்ளது.

இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் டெல்லி கோபி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இரண்டு மாநிலங்களின் ஆளுநர் படத்தையே ஆபாசமாக சித்தரித்து லோன் ஆப் மோசடி கும்பல் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.