சென்னை புரசைவாக்கம், ஆண்டர்சன் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் சிவசாமி (வயது 51). இவர், சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். தன்னை கேரளாவைச் சேர்ந்த மந்திராவதி ஒருவர் ஆவிகளிடம் பேச வைப்பதாக ரூ.2 கோடி மோசடி செய்தததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “நைஜீரியாவில் சாப்ட்வேர் கம்பெனியில் நான் பணியாற்றிய போது, கேரளாவைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் என்னுடன் வேலை பார்த்தார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் நான் நைஜீரியாவை விட்டு சென்னை வந்து விட்டேன். சுப்ரமணியும் கேரளாவுக்கு திரும்பிவிட்டார்.
சுப்ரமணி என்னுடன் ஒன்றாக வேலைபார்த்த நண்பர் என்ற முறையில் சென்னைக்கு எனது வீட்டுக்கு அடிக்கடி வருவார். சுப்ரமணிக்கு மாந்திரீக வேலை தெரியும். நான் தலைசிறந்த ஆன்மிகவாதி. கோவில்களுக்கு அடிக்கடி போவேன் என்று என்னிடம் கூறுவார். அவ்வப்போது சுப்ரமணியும் என்னுடன் கோவில்களுக்கு வருவார். அவர் தெய்வங்களுடன் பேசுவதாகவும் என்னிடம் சொல்வார். புட்டபர்த்தி சாய்பாபா அவருடன் பேசுவதாக சொன்னார். இறந்துபோன எனது தாயாரின் ஆவி கூட அவருடன் பேசுவதாக கூறி என்னை நம்ப வைத்தார். சாமி போட்டோவில் இருந்து விபூதியை கொட்ட வைப்பார். கையில் இருந்து திடீரென்று எலுமிச்சை பழத்தை எடுப்பார். இதுபோல மாயாஜால வித்தைகளை செய்து காட்டியதால் அதை உண்மை என்று நானும் நம்பினேன். இப்படியே பேய்களை பற்றியே என்னிடம் அவர் பேசி வந்தால், எனக்கும் அவரைப்போல் தெய்வங்கள் மற்றும் ஆவிகளிடம் பேச ஆசை ஏற்பட்டது,
குறிப்பாக புட்டபர்த்தி சாய்பாபாவிடம் பேச எனக்கு ஆசை வந்தது. எனது ஆசையை சுப்ரமணியிடம் கூறினேன். அவரும் தெய்வங்கள் மற்றும் ஆவிகளை என்னிடம் பேசவைப்பதாக கூறினார். இதற்காக கேரளாவில் உள்ள அவரது வீட்டுக்கு என்னை அடிக்கடி அழைத்துச் சென்று பூஜை செய்தார். எனது விபரீத ஆசையை புரிந்து கொண்ட அவர், என்னிடம் அவ்வப்போது லட்சம், லட்சமாக பணம் கறந்து வந்தார். ரூ.2 கோடி வரை என்னிடம் வாங்கி விட்டார். ஆனால், சுப்ரமணி கூறியதுபோல, தெய்வங்களிடமோ, ஆவிகளிடமோ, குறிப்பாக புட்டபர்த்தி சாய்பாபா ஆவியிடமோ என்னால் பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் சுப்ரமணி மீது எனக்கு சந்தேகம் எழுந்தது. அவரது மாந்தீரிக, மாயாஜால வேலை எல்லாம் மோசடி என்பதை தாமதாக தெரிந்து கொண்டேன்.
அவரது தொடர்பை விட முடிவு செய்தேன். அவர் என்னிடம் ஏமாற்றி வாங்கிய ரூ.2 கோடி பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். அவர் பணத்தை திரும்ப தர மறுத்தார். மாந்திரீகம் மூலம் என்னை தீர்த்துக்கட்டி விடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, அவரிடம் நான் இழந்த ரூ.2 கோடி பணத்தை மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன்” இவ்வாறு தனது புகார் மனுவில் கவுதம் சிவசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் மீனா, கூடுதல் துணை கமிஷனர் அசோகன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான்விக்டர் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. மந்திரவாதி சுப்ரமணி கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய தேடினார்கள். ஆனால் அவர் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். அவரிடம் போலீஸ் என்று சொல்லாமல், குறி கேட்க வேண்டும், என்பது போல போனில் பேசி போலீசார் நடித்தார்கள்.
அதை உண்மை என்று நம்பிய சுப்ரமணி, திருவனந்தபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு போலீசாரை வரச்சொன்னார். அங்கு குறி கேட்பவர்கள் போல மாறு வேடத்தில் சென்ற போலீசார், அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைதான சுப்ரமணியை போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்”. இவ்வாறு போலீசார் கூறினார்கள்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சுப்ரமணி போலீசாரிடம் கூறுகையில், ”நான் டிகிரி படிச்சிருக்கேன். சிறுவயது முதலே எனக்கு தெய்வ பக்தி உண்டு. மந்திரம் கால், மதி முக்கால் என்பது பழமொழியாகம். அதை அடிப்படையாக வைத்துதான், நான் செயல்படுவேன். மாந்திரீக வேலை எனது தொழில் கிடையாது. நானும் நைஜீரியா சென்று, வேலை செய்துவந்தேன். என்னிடம் தெய்வங்கள் பேசுவது உண்மை. அதுபோல தனக்கும் தெய்வங்களிடம் பேச வேண்டும், என்ற ஆசை கவுதமுக்கும் ஏற்படடது.நானும் அதற்கு முயற்சி செய்தேன். நான் கவுதமிடம் பணம் வாங்கியது உண்மை. ஆனால் ரூ.2 கோடி வாங்கவில்லை. சிறிது, சிறிதாக கொடுத்தார். தெய்வங்களிடம் பேசுவது என்பது ஒரு தனி கலை. அதற்கு கவுதம் தகுதியான ஆள் இல்லை” என்று சுப்ரமணி கூறினார்.