பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் என வாட்ஸ் அப்பில் பரவும் செய்தி தவறானது. அப்படி எந்த திட்டமும் இல்லையென அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாணவர்களுக்கான பிரதமரின் இலவச லேப்டாப் திட்டம் தொடர்பான தவறான தகவல் பரப்பப்படுவதை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு அதனை மறுத்துள்ளது. இதுபோன்ற திட்டம் தொடங்கப்பட்டதாக பொய்யான பல தவறான தகவல்கள் இணையத்தில் வெளிவந்தன. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு இணையதளம் மூலம் இந்தத் திட்டத்திற்கு மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கழக அதிகாரிகள் AICTE-யால் அத்தகைய திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை. மாணவர்களுக்கான பிரதம மந்திரியின் இலவச லேப்டாப் திட்டம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது செயல்படுத்தல் எதுவும் இல்லை. வேறுவிதமாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் கற்பனையானது மற்றும் தவறானது என்று AICTE இன் அதிகாரிகள் மேற்கோள் காட்டியுள்ளார்.
மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் தகவலை பொறுப்பற்ற முறையில் பரப்பி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இது போன்ற ஆதாரமற்ற கூற்றுக்கள் மாணவர்களை தவறாக வழிநடத்துவது மட்டுமின்றி அரசாங்கத்தின் உண்மையான முயற்சிகளின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குவதாக அதிகாரி கூறினார். இது போன்ற சம்பவங்கள் ஆன்லைன் மோசடிக்கு வழிவகுக்கும் என்றார்.