வீட்டில் வளர்க்கப்படும் செல்லபிராணிகள் மற்றும் கால்நடைகள் ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருந்தால் சிகிச்சை அளிக்கும் வகையில் வீடுதேடி வரும் இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை தற்போது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ‘1962’ இலவச கால்நடை மருத்துவ ஊர்தி சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரைக் காக்கும் நோக்கத்தின் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. 5 மாவட்டங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், தற்போது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களில் கூட, ‘1962’ எனும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், மருத்துவ வசதி தேவைப்படும் இடத்திற்கே மருத்துவ ஊர்தி அனுப்பி வைக்கப்படும். இந்த மருத்துவ ஊர்திகளில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் தயார் நிலையில் இருப்பார்கள். இந்த ஊர்திகள் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டாலும் கூட, 24 மணி நேரமும் கால்நடைகளுக்கான மருத்துவ உதவிகளை பெற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசியக் கருவிகள், உபகரணங்கள், மருந்துகள் ஆகியவை மருத்துவ ஊர்திகளில் உள்ளன. நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்றுவதற்காக ‘ஹைட்ராலிக் லிப்ட்’பொருத்தப்பட்டுள்ளது. மின்சார வசதியில்லாத இடத்தில் கூட இரவு நேரங்களில் சிகிச்சை அளிப்பதற்காக, வாகனத்துக்கு வெளியே ஜெனரேட்டர் மூலம் செயல்படக்கூடிய பெரிய விளக்கு பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.