புதுச்சேரியில் நவ. 1ஆம் தேதி முதல் போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”ஒரு பக்க பார்க்கிங் புதுவை நகரப் பகுதியில் அதிகரித்து வரும் நிலையில், வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொதுமக்களின் நலன்கருதி வருகிற 1ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நேரு வீதியில் 2 பக்கங்களிலும் வாகனம் நிறுத்தம் முறை தடை செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் முன்பு இருந்ததுபோல் நேரு வீதியில் வடக்கு பக்கம் மட்டும் ஒரு வரிசையில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த நடைமுறையானது முன்பு இருந்ததுபோல் 6 மாதத்துக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். மேலும், மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் இருசக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் (வாகன ஓட்டி மற்றும் அமர்ந்து செல்பவர்) கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை மீறி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பள்ளி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்வதோடு அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டப்படி அவர்களுக்கு 25,000 ரூபாய் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் நலன்கருதி செய்யப்படும் இந்த நடவடிக்கையை அனைவரும் பின்பற்றி புதுச்சேரி போக்குவரத்து காவல் பிரிவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.