முன்பதிவு செய்தால் கேஸ் சிலிண்டர் போலவே மளிகைப் பொருட்களும் வீடுகளுக்கே விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடங்கி உள்ளது.
இந்தியா முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான், இண்டேன், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. இந்தநிலையில், தற்போதைய நடைமுறையை பொறுத்தவரை சிலிண்டர்களை மொபைல் போனில் முன்பதிவு செய்தால் அடுத்த சில நாட்களில் வீடுகளுக்கே நேரில் வந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சமையல் கேஸ் விநியோகிக்கும் நிறுவனங்கள் சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு மற்றும் அதற்கு தேவையான ஸ்பேர்களை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேஸ் சிலிண்டருடன் மளிகைப் பொருட்களையும் இனி கேஸ் ஏஜென்சிகளிடம் இருந்து வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் கேஸ் சிலிண்டருடன் மளிகை சாமான்களும் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தை இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஐஒசிக்கு 925 ஏஜன்சிகள் உள்ளன. இந்த ஏஜென்சிகள் மூலம் 1.48 கோடி வீட்டு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த ஏஜென்சி நிறுவனங்கள் தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர்களை தமிழகத்தில் விநியோகம் செய்து வருகிறது. ஒவ்வொரு ஏஜன்சிக்கும் சராசரியாக 15,000 வாடிக்கையாளர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது ஐஒசி நிறுவனம் சமையல் கேஸ் விற்பனையை தாண்டி, வணிகம் மூலமும் வருவாயை பெருக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் குளிர்பானம் பிஸ்கட் இவைகளையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜென்சிகள் ஒரு சிலிண்டருக்கு ரூ 60 கமிஷன் பெற்று சிலிண்டரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றன. கையோடு மளிகை பொருட்களை விற்பனை செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என இத்திட்டத்தை ஐஒசி முன்னெடுத்துள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம் ,பொள்ளாச்சியில் நடைமுறைப்படுத்தப்படும். படிப்படியாக அனைத்து ஊர்களிலும் விரிவுபடுத்தப்படும் என இந்தியன் ஆயின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வணிகத்தை ஏஜன்சிகள் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும், விருப்பப்படுபவர்கள் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மளிகை பொருட்களையும் பொதுமக்கள் பெற முடியும்.