தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.