இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பூலுவப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் பஷீர் மகன் ஷாஜகான் (26). இவர், திருப்பூரில் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயதான இளம்பெண்ணும், ஷாஜகானும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து அந்த பெண், ஷாஜகானுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. காதலை கைவிட்டதால் விரக்தியடைந்த ஷாஜகான், காதலியை வேறு எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காதலை கைவிட்டால் இருவரும் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி ஷாஜகானை கைது செய்தனர்.