இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. குறிப்பாக பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ தளங்கள் வழியாக, மக்கள் அதிகமாக பண பரிவர்த்தனை செய்கிறார்கள். இது சாதாரணமாக பெட்டிக்கடைகளில் சாக்லேட் வாங்குவதில் தொடங்கி, ரயில் கட்டணம், மின்சாரக் கட்டணம், வீட்டு வாடகை வரை யுபிஐ மூலமாகவே பணம் செலுத்துகின்றனர். இதன் மூலமாக மக்களின் நேரம் வெகுவாகக் குறைக்கப்படுகிறது.
கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக 5 லட்சம் வரை யுபிஐ முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. ஓராண்டுக்கு மேல் செயல்பாட்டில் இல்லாத யுபிஐ கணக்குகளை செயலிழக்கச் செய்ய பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளுக்கு NBCI அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல ஆன்லைன் பண பரிமாற்றத்தில் நடக்கும் மோசடிகளை தடுக்க, முதல் முறை 2000க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு, 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் முறை ஒருவருக்கு 2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்புகிறீர்கள் என்றால், மீண்டும் அதே நபருக்கு பணம் அனுப்ப 4 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் கூகுள் பே நிறுவனம் தற்போது புதிய ரூல்ஸ் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் வைத்திருக்கும் நபர் பிரைமரி பயனர் (Primary User) ஆவார். சம்பந்தப்பட்ட நபர் அந்த எண்ணில் வழக்கம் போல யுபிஐ ஐடியை ஓப்பன் செய்து கொள்ளலாம். அதன்பிறகு 2ஆவது முறையாக செகண்டரி பயனர் (Secondary User) யுபிஐ ஐடியையும் உருவாக்கி கொள்ள முடியும். இந்த 2ஆவது யுபிஐ ஐடிக்கு லிமிட் விதிக்க முடியும்.
அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு ரூ.15,000 செலவு அனுமதி வழங்கலாம். அதேபோல இந்த தொகைக்கு உள்ளாக ரூ.5000 அல்லது ரூ.10000 என்றும் லிமிட் செய்து கொள்ளவும் பிரைமரி பயனரால் முடியும். ஆகவே, இந்த குறிப்பிட்ட தொகையை மட்டுமே செகண்டரி பயனர் செலவழிக்க முடியும். அதே நேரத்தில், செகண்டரி பயனர் பேமெண்ட்கள் செய்யும்போது, அதற்காக அனுமதியை பிரைமரி பயனரே வழங்கி கொள்ளலாம்.