செங்கல்பட்டு பகுதியில் விநாயகர் சிலை அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணா (28). இந்நிலையில், இவரது வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு உட்கார்ந்து ராஜேஷ் கண்ணா மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, சைலோ காரில் வந்த வல்லம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் 10 பேர் கொண்ட கும்பல் ராஜேஷ் கண்ணாவை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

மேலும், இதனை தடுக்க முயன்ற கார்த்திக், மோகன்ராஜ் ஆகியோரையும் காத்தியால் கை மற்றும் கால்களில் வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் கண்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், ராஜேஷ் கண்ணாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த படுகொலை முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.