சென்னை பழைய மகாபலிபுர சாலை, காரப்பாக்கம் இந்திரா நகர் பகுதியில் நேற்றிரவு நண்பர்கள் 6 பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை மற்றவர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவத்தில் அந்த ஒரு நபரை, அவரது பின் தலையில் பலமாக மற்றவர்கள் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுய நினைவின்றி மயங்கியுள்ளார். இதைக்கண்ட அந்த 5 பேரும், ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்து விட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அடிபட்டவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவமனை மூலம் கிடைத்த தகவலின் பேரில் கண்ணகி நகர் ஆய்வாளர் தயாள் தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். விசாரணையில் இறந்த நபர் நித்யா (34) என்பதும், அவர் கண்ணகி நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவருடன் மது அருந்திய 5 பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடியவர்களை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.