மருத்துவ குணம் வாய்ந்த கஞ்சாவை மருந்தகங்களில் விற்பனை செய்வதற்காக அதன் வாசனையை மோப்பம் பிடிக்கும் வேலைக்காக ரூ.88 லட்சம் சம்பளம் கொடுக்கப்படும் என்று ஜெர்மனியை சேர்ந்த ஃபார்மசி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
ஜெர்மனியின் கொலோன் என்ற பகுதியில் Cannamedical என்ற ஃபார்சி நிறுவனம் இயங்கிவருகிறது. இந்தநிலையில், மருத்துவ குணம்வாய்ந்த கஞ்சாவை ஜெர்மனியில் உள்ள மருந்தகங்களில் விற்பனை செய்வதற்காக அதன் வாசனையை நுகர, உணர, மற்றும் புகைக்கக்கூடிய தரத்தை சரிப்பார்க்க தேர்ந்த ஆட்களை வேலைக்கு எடுக்கப்போவதாகவும் இதற்காக ரூ.88 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்தநிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான டேவிட் கென் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆஸ்திரேலியா, கனடா, போர்ச்சுகல், மெசடோனியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தங்களது வியாபாரிகளுக்கு தரமான வகையில் கஞ்சாவை அனுப்புவதற்காக இந்த வேலைக்கு ஆட்களை எடுப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்த வேலையில் சுலபமாக சேர்ந்துவிடலாம் என்று பலரும் விண்ணப்பித்திருக்கின்றனர், ஆனால், இந்த வேலைக்கு தேர்வுச்செய்யப்படுபவர்கள், மருத்துவ கஞ்சாவை பயன்படுத்தக்கூடியவர் என்று ஜெர்மனியில் பதிவு செய்திருக்கவேண்டும் என்றும் கென் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜெர்மனியில் சுமார் 40லட்சம் பேர் போதை வஸ்துகளை பயன்படுத்தி வருவது தெரியவந்த நிலையில், பொழுதுப்போக்குக்காக கஞ்சா பயன்படுத்துவதற்கு ஜெர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சர் கார்ல் லட்டர்பாக் கடந்த ஆண்டு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில், பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செது வரும் நிலையில், கஞ்சாவை மோப்பம் பிடிக்கும் வேலைக்காக ரூ.88 லட்சம் சம்பளம் கொடுக்கப்படும் என்று இந்த ஃபார்மசி நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.