உலக சுகாதார தினத்தையொட்டி இன்று (திங்கட்கிழமை) மும்பை மாநகராட்சி பொது இடங்களில் அகற்றப்படாமல், குவிந்து கிடக்கும் குப்பை பற்றி வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கும் ‘வாட்ஸ்-அப் சாட்போட்’ வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.
பொதுமக்கள் பொது இடங்களில் குப்பை கிடந்தால், அல்லது குப்பை தொட்டிகளில் நிரம்பி இருக்கும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் இருந்தால் 8169681697 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கலாம். பொது மக்கள் வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிப்பதுடன், கழிவு மேலாண்மை துறை பரிந்துரைகளையும் வழங்கலாம். இந்த புதிய வசதி மூலம் பொதுமக்கள் ரோட்டில் அகற்றப்படாமல் கிடக்கும் குப்பை, சுத்தமில்லாமல் இருக்கும் சாலைகள் குறித்து படத்துடன் முகவரி அல்லது ஜி.பி.எஸ். லொக்கேஷனுடன் புகார் அளிக்கலாம். பொது மக்களிடம் இருந்து புகார் வந்தவுடன் அது சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.சம்மந்தப்பட்ட அதிகாரி குறிப்பிட்ட நேரத்துக்குள் குப்பைகளை அகற்றி, இடம் சுத்தம் செய்யப்பட்ட படத்தையும் வெளியிடுவார்.