இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது..
பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இதில் இயற்கை எரிவாயு, சிஎன்ஜி மற்றும் குழாய் மூலம் வரும் சமையல் எரிவாயுவின் விலையை கட்டுப்படுத்த உச்சவரம்பு விலையை விதித்தது. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் “ இயற்கை எரிவாயு, அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் எரிவாயு விலையை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.. ஆனால் இந்தியாவில் அதற்கு பதிலாக இப்போது கச்சா எண்ணெய் விலைக்கு அட்டவணைப்படுத்தப்படும்..” என்று தெரிவித்தார்..
மேலும் பேசிய அவர் “ ஏப்ரல் 1 முதல், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலையில் 10 சதவீதமாக இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய நடைமுறையில் இருக்கும், ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்வதற்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் கட்டணங்கள் முடிவு செய்யப்படும்.
இந்த வழிகாட்டுதல்கள், உள்நாட்டு இயற்கை எரிவாயு நுகர்வோருக்கு நிலையான விலை நிர்ணயத்தை உறுதி செய்யும் என்றும், பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து உற்பத்தியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதோடு, உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஊக்குவிப்புகளை வழங்கும்..” என்று தெரிவித்தார்.. .
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் முதன்மை எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை தற்போதைய 6.5% இலிருந்து 15% ஆக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. எனவே இந்த நடவடிக்கை இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க உதவும்.. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, வீடுகளுக்கான குழாய் இயற்கை எரிவாயு (PNG) மற்றும் போக்குவரத்துக்கான இயற்கை எரிவாயு (CNG) ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைய வழிவகுக்கும். குறைக்கப்பட்ட விலைகள் உர மானியச் சுமையைக் குறைப்பதுடன், உள்நாட்டு மின் துறைக்கு உதவும். இது இயற்கை எரிவாயு அதிக உற்பத்திக்கு வழிவகுக்கும் மற்றும் அதன் விளைவாக இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..