காஸா நரகமாக மாறி வருவதாகவும், அழிவின் விளிம்பில் உள்ளது என்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கிலான மக்கள் வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதிகளில் இருந்து தெற்கு காஸா நோக்கி குடிபெயர்ந்து வருகின்றனர். மற்றவர்கள், எங்கு சென்றாலும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. அதற்குப் பதிலாக வீடுகளில் இருந்தவாறே இறந்து போகலாம் என இடம்பெயர மறுத்து வீதிகளில் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல், வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்களைத் தெற்கு நோக்கி இடம்பெயரக் கட்டளையிட்டு அந்தப் பகுதிகளைப் போர் மண்டலமாக அறிவித்தது. இந்த அறிவிப்பை வானில் இருந்து துண்டு பத்திரிகைகள் வீசியும் முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒலிக் குறிப்பை (வாய்ஸ் மெசேஜ்) மக்களின் அலைபேசிகளுக்கு அனுப்பியும் இஸ்ரேல், மக்களை வெளியேற வலியுறுத்தியது. இது ‘மாபெரும் மனித அழிவை உருவாக்கும்’ என ஐ.நா. எச்சரித்தது.
இந்த நடவடிக்கை காஸா மக்களின் பாதுகாப்புக்காக என இஸ்ரேல் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், தெற்கு காஸாவுக்குச் செல்லும் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 2 ட்ரக்குகள் மற்றும் 1 காரை இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசி தகர்த்தியது. ஏற்கெனவே தரைவழியாக தாக்குதலைத் தொடங்கியிருக்கும் இஸ்ரேல், சில இடங்களில் நேரடியான தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
பாலஸ்தீனர்கள் இந்த நிகழ்வை ‘நக்பா’ (பேரழிவு) என அழைக்கிறார்கள். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதை இரண்டாவது நக்பா என்கிறார்கள். ‘நாங்கள் எங்கு சென்றாலும் எப்படியும் தாக்குவார்களெனில் நாங்கள் ஏன் செல்ல வேண்டும்? வீட்டிலிருந்து இங்கேயே இறந்து போகிறோம்’ காஸா நகரத்தில் இருந்து இடம்பெயர மறுக்கும் அபு குதா என்பவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியிலுள்ள அல் அவ்தா மருத்துவமனையைத் தொடர்புகொண்டு இடம்பெயர ஆணையிட்டுள்ளது. நூற்றுக்கணக்கிலான காயமுற்றவர்களை இடம் மாற்றுவது எளிதானது கிடையாது. அவர்களை கைவிட்டும் செல்ல முடியாது என்ற நிலையில் ராணுவம் கூடுதலான காலக்கெடு அளித்துள்ளது. பள்ளிகளில் ஐ.நா. நிர்வகிக்கும் முகாம்களில் ஆயிரக்கணக்கிலான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். தங்களால் இங்குள்ளவர்களை இடம்மாற்ற முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை ‘மனித பேரழிவு வளர்ந்து வரும் வேகம் மற்றும் அளவு சில்லிட செய்கிறது. காஸா நரகமாக மாறி வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ளது’ என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையின் ஆணையர் பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார்.