அதிமுக பொதுக்குழு தொடர்பாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகளும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ’அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருவரும் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. தனி நீதிபதி தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.
இந்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, எடப்பாடி பழனிசாமி, அதிமுக சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில் ‘இந்த விவகாரத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யும்போது, தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக அதிமுக தலைமை கழக நிர்வாகிகளும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.