கோவை மாவட்டம் கல்வீரன்பாளையம் முருகன் நகர், நேரு தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (45). இவர், கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரிடம், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 இளம்பெண் ஒருவர் வேலை விஷயமாக பேசி வந்துள்ளார். நேற்று வேலை தொடர்பாக தன்னை சந்திக்கும்படி சிவபிரகாசம் கூறியதை அடுத்து, சான்றிதழ்களுடன் அந்த இளம்பெண் கோவையில் உள்ள பேராசிரியர் சிவப்பிரகாசம் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் சிவப்பிரகாசம் மட்டும் இருந்துள்ளார். முதலில் பேசிக்கொண்டே இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் தடுத்த போது அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பிய இளம்பெண் வீட்டில் இருந்த கழிவறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக் கொண்டுள்ளார்.
பிறகு அங்கு இருந்து கொண்டே செல்போனில் அவரது தோழிக்கு லொகேஷன் அனுப்பியுள்ளார். அவரது தோழி அந்த பகுதியில் உள்ள வடவள்ளி காவல்துறைக்கு தகவலும், லொகேஷனையும் பகிர்ந்து வைத்துள்ளார். இதையடுத்து, உடனே வடவள்ளி காவல்துறையினர், பேராசிரியர் சிவப்பிரகாசம் வீட்டிற்கு சென்று, கழிவறைக்குள் இருந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பாக பெண் அளித்த புகாரில் சிவப்பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.